ஆவாரம் பூ Vs நீரழிவு நோய்

ஆங்கில பெயர் – Matura tea tree, Ranawara or Avaram

தாவரவியல் பெயர் – CASSIA AURICULATA

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்த ஆவாரம் பூ நீரழிவு நோயாளிகளுக்கு மத்தியில் ஒரு பிரபலமான மருத்துவ மூலிகை தெரியப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் இந்த மூலிகையை ஏதோ நீரழிவு நோய்க்கு மட்டுமான மூலிகையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இது நீரழிவு நோயை விட நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் ஒரு சிறந்த மூலிகை. அதைத் தவிர இது வயிற்றில் இருக்கும் பூச்சி கிருமி போன்றவற்றையும் அழித்துவிடும்

ஆவாரம்பூவின் வீரியம் ஒவ்வொரு பூவுக்கும் அது பூத்திருக்கும் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப அதன் வீரியம் மாறுபடும். எந்தெந்தக் காரணிகள் அடிப்படையில் இந்த பூவின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

~~~~  குறிப்பாக செம்மண், சரளை மண் இருக்கும் பகுதிகளில் வளரும் ஆவாரம்பூ வீரியமானதாக இருக்கும்.

~~~~  நீர் பற்று இல்லாமல் ஜீவ மரணப் போராட்டத்துடன் வளரும் ஆவாரம் பூ செடியில் பூக்கும் மலர்களின் வீரியம் அதிகமாக இருக்கும்.

~~~~  மழைக்காலங்களில் விட கோடை காலங்களில் பூக்கும் பூ வீரியம் அதிகமாக இருக்கும்.

~~~~  இளம் செடியை விட முற்றிய செடியில் இருக்கும்போது வீரியம் அதிகமாக இருக்கும்.

~~~~  விவசாய முறைப்படி வளர்ந்த செடியை விட காட்டுச் செடியாக தானாக வளர்ந்த செடியில் பூக்கும் பூ வீரியம் அதிகமாக இருக்கும்.

~~~~  முற்றிய தனி பூக்களை விட மொட்டுக்களோடு சேர்ந்து இருக்கும் இளம் பூக்கள் வீரியமாக இருக்கும்.

~~~~  மழை குளிர் பனி மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் வளரும் செடியை விட பாலைவனம் போன்ற வறண்ட பிரதேசங்களில் வளரும் செடியில் வீரியம் அதிகமாக இருக்கும்.

~~~~  தனி ஆவாரம்பூ மட்டும் தனியாக எடுத்துக் கொள்வதை விட வேறு சில மூலிகைகள் சேர்ந்த சூரணங்கள் உண்டு. அவை அதிக வீரியமாக இருக்கும்.

இதுபோல இந்தப் பூவின் வீரியம் வெவ்வேறு காரணிகளால் மாறுபடுகிறது. அது மட்டுமல்ல இந்தப் பூவில் இருக்கும் 29  தாவர வேதிப் பொருள்கள் Phytochemicals இணைந்து தான் நீரழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது. இந்த வேதிப்பொருட்களின் அளவு சதவிகிதம் மேலே சொன்ன ஒவ்வொரு காரணிகளாலும் மாறுபடுகிறது.

இதன் ஒட்டுமொத்த பூவையும் வெவ்வேறு நிலைகளை வைத்து ஆராய்ச்சி செய்து இந்த பூவின் மூலம் நீரழிவு நோய் கட்டுப்படுவதாக உறுதி செய்துள்ளனர். இதில் உள்ள வேதிப் பொருட்களையும் (Phytochemicals) பிரித்தெடுத்து ஆராய்ந்துள்ளனர். அதில் குறிப்பாக எந்த வேதிப்பொருள் மூலமாக இந்த நீரழிவு நோய் கட்டுப்படுகிறது என்பது இதுவரை கண்டு பிடிக்கப் படவில்லை. அது தொடர்பான ஆராய்ச்சி இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

Ref : https://www.researchgate.net/publication/267032524_Chemical_composition_and_characterization_studies_of_cassia_auriculata_flower_extract

இதில் அடிப்படை ஆல்கீன்கள் முதல் ஆல்கஹால், எஸ்டர் போன்ற அடிப்படை மூலக்கூறுகளுடன் தாலிக் அமில டெரிவேட்டிவ்கள் வரை 29 முக்கிய மூலக்கூறுகளை பிரித்துள்ளனர். ஆனால் எந்த தனி மூலக்கூறும் அல்லது எந்தக் கலவையும் ஒட்டுமொத்த பூ கொடுத்த நீரழிவு நோயை குணமாக்கும் நேர்மறையான முடிவுகளை இதுவரை பெரிய அளவில் தரவில்லை. ஆனால் ஒட்டுமொத்த பூவும் நோய்க்கு எதிராக செயல்படும் விதங்களை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர்.

Ref 1: https://www.jstage.jst.go.jp/article/cpb/62/10/62_c14-00420/_article/-char/ja/

Ref 2: https://scialert.net/fulltext/?doi=ajb.2014.195.202

Ref 3: https://www.sciencedirect.com/science/article/abs/pii/S092777651100275X

இந்த ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து அதை நீரில் காய்ச்சி வடிகட்டி கசாயத்தை எலி முதல் வெவ்வேறு விலங்குகளில் சோதனை செய்து அவை அனைத்திலும் இந்த மூலிகை நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதாக உறுதி செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சி உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் செய்யப்பட்டு அனைத்திலும் இந்த பூவின் காய்ந்த சருகு கசாயமாக காய்ச்சி கொடுக்கும்போது நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதாக உறுதி செய்துள்ளனர். இணையதளத்தில் சென்று பார்த்தால் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன. அதில் எலியின் மீது செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவை ஒரே ஒரு உதாரணமாக கீழே இணையதள லிங்க் கொடுத்துள்ளேன்.

Ref : https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5478254/

இதுவும் மற்ற நீரழிவு நோய்க்கு எதிரான மூலிகைகளைப் போலவே ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணமுடையது. இது இன்சுலின் சுரப்பையும் ஓரளவு தூண்டுகிறது. ஆனால் இதன் முக்கியமான செயல்பாடுகள் வேறு இரண்டு இடங்களில் இருக்கிறது.

ஒன்று மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாட்டை ஊக்குவித்து உடலுக்குத் தேவையான சக்தியை விரைவாக பெற வைக்கிறது. இந்த மைட்டோகாண்ட்ரியாவின் வேகமான வளர்சிதை மாற்றத்தின் விளைவாக உடலுக்கு அதிக சக்தி உடனடியாகக் கிடைக்கிறது. இதன் மூலம் நீரழிவு நோயாளிகளுக்கான சில அசதி அல்லது எப்போதும் ஒரு தூக்க நிலையில் இருக்கும் ஒரு மந்த நிலை சிறிது சிறிதாக மாற்றம் காணும். உடலையும் உறுப்புகளையும் சுறுசுறுப்பாக்கும். சில மூட்டுவலி போன்ற வலிகளையும் குறைக்கும்.

இன்னொன்று இதன் மிக முக்கியமான செயல்பாடு ஜீரண மண்டலத்தில் தான் உள்ளது. இது ஆல்ஃபா அமைலேஸ் மற்றும் ஆல்ஃபா குளுக்கோசைடிஸ் போன்ற ஜீரண சுரப்பிகளின் மீது செயல்படுகிறது. இந்த இரண்டு ஜீரண என்சைம்களும் அதிக அளவில் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் அதாவது சர்க்கரை சத்தை ரத்தத்திற்கு ஜீரணம் செய்து அனுப்புகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உயர்கிறது. ஆவாரம் பூவின் மூலிகை மருந்தானது இந்த இரு என்சைம்கள் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி அவை கார்போஹைட்ரேட்டுகளை தேவைக்கு அதிகமாக ஜீரணிப்பது தடைசெய்கிறது.

Ref : https://www.sciencedirect.com/science/article/pii/S0753332218345852

(என்சைம் மற்றும் ஜீரண செயல்பாடுகளின் மீது இந்தப் பூவின் தாக்கத்தை முழுமையாக தெரிந்துகொள்ள மேலே குறிப்பிட்டுள்ள அந்த லிங்கில் சென்று அதில் உள்ள தேவையான PDF File எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்யலாம்.)

ஆவாரம் பூ வியாபார ரீதியாக டீ தூளுடன் கலந்து ஆவாரம்பூ டீ ( Kalpa herbal tea, Avarai panchaga chooranam, etc… ) என்று விற்பனைக்கு வருகிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று அந்த ஆவாரம்பூ டீ என்பதில் உள்ள டீ தூள் கிரீன் டீ வகையாக இருக்க வேண்டும். முடிந்தவரை அதிலும் ஆர்கானிக் கிரீன் டீ தூளாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. சாதாரண டீயுடன் இது சேர்த்து ஆவாரம் டீயாகக் குடிக்கும் போது உடம்பில் பித்தம் கூடிவிடும். இந்த ஆவாரம்பூ டீயைப் பற்றி தனி பதிவாக பின்னர் தருகிறேன்.   

இந்தப் பூவை பறித்து அப்படியே சாப்பிடுவதோ அல்லது அதை அப்படியே நீரில் கொதிக்க வைத்துக் குடிப்பது பலன் கிடையாது. இந்தப் பூவை ஒரு நாள் வெயிலில் காயவைத்து அதன் பின்பு நிழலில் காயவைத்து தொட்டால் பொடியாகும் அளவிற்கு நீர்பதம் இன்றி சுக்காகக் காய்ந்த பின்பு அதை பயன்படுத்தினால் தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

தனி ஆவாரம்பூ பொடியாக அல்லது காய்ந்த பூவாக கடைகளில் கிடைக்கும். அவை ஓரளவு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தினாலும் ஆயுர்வேத சித்த முறைகளின் மூலம் சூரணமாக மாற்றப்பட்டு இருக்கும் நிலைதான் அதிக வீரியமாக இருக்கும்.

By,

*P. A. KUTTALA RAJAN*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *